ஹைதராபாத்: டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 160வது பிரிவின் கீழ் டிசம்பர் 6 ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சி.ஆர்.பி.சி.யின் 160வது பிரிவின் கீழ், விசாரணை அதிகாரி ஒரு குறிப்பிட்ட வழக்கில் எந்த நபரையும் சாட்சியாக அழைக்கலாம். அதன்படி விசாரணைக்கு ஆஜராக அவருக்கு உகந்த இடத்தை கூறும்படி சிபிஐ அனுப்பியிருந்த நோட்டீஸ் க்கு, ஹைதராபாத் இல்லத்தில் தன்னை சந்திக்கலாம் என்று அதிகாரிகளுக்கு கவிதா பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
கவிதா விசாரணை தொடர்பாக 6-12-2022 அன்று 11.00 மணிக்கு உங்கள் வசதிக்கேற்ப வசிக்கும் இடத்தை (ஹைதராபாத் அல்லது டெல்லி) தயவுசெய்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி அலோக் குமார் ஷாஹி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த ஊழல் மோசடி தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த ரிமாண்ட் அறிக்கையில் தனது பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கவிதா தெரிவித்துள்ளார்.
மேலும் "சி.ஆர்.பி.சி.யின் 160வது பிரிவின் கீழ், என் விளக்கம் கேட்டு எனக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் வேண்டுகோளின்படி டிசம்பர் 6 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள எனது இல்லத்தில் அவர்களை சந்திக்கலாம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்," என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் மீது சிபிஐ நவம்பர் 25 அன்று தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி, விஜய் நாயர், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சார்பில் சரத் ரெட்டியால் கட்டுப்படுத்தப்படும் சவுத் குரூப் என்றழைக்கப்படும், கே.கவிதா, மகுண்டா ஸ்ரீநிவாசுலு, அமித் அரோரா உட்பட குழுவிடமிருந்து குறைந்தது 100 கோடி ரூபாய் பெற்றுள்ளார்," என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அமித் அரோரா மீது தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிமாண்ட் அறிக்கையில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
"எந்த வகையான விசாரணையையும் சந்திப்போம் என்று நாங்கள் கூறுகிறோம். விசாரணை குழு வந்து எங்களிடம் கேள்விகள் கேட்டால், நாங்கள் நிச்சயமாக பதிலளிப்போம்" என்று கவிதா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மொட்டை வெயிலில் பயணிகள் அவதி : மொபைல் பேருந்து நிறுத்தம் உருவாக்கிய இளைஞர்கள்...