பெங்களூரு:பாஜக தொண்டர் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியை மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
பாஜக தொண்டர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சூழலில், முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான வினய் குல்கர்னியை சிபிஐ அலுவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
தார்வாட் மாவட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் வைத்து, சிபிஐ அலுவலர்கள் அவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பாஜகவின் பஞ்சாயத்து உறுப்பினர் தனது உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே ஜூன் 15, 2016 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த விசாரணையை சிபிஐ 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் தங்கள் வசம் எடுத்துக் கொண்டது
செப்டம்பர் 2016ஆம் ஆண்டே, இந்த கொலை வழக்கு தொடர்பாக, ஆறு பேர் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்திருந்தனர் உள்ளூர் காவல் துறையினர். சிபிஐ வசம் இந்த வழக்கு சென்றபின், 8 பேர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டது. அதில் 7 பேர் நீதிமன்ற காவலிலும், ஒருவர் வெளியே பிணையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.