டெல்லி: 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீடியோகான் குழுமத்துக்கு விதிகளை மீறி 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கினார். இந்த கடனில் குறிப்பிட்ட தொகை சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு சென்றதாக கூறப்படுகிறது. வீடியோகான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் வராக் கடனாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஐசிஐசிஐ வங்கி கடந்த 2018ஆம் ஆண்டு சந்தா கோச்சாரை பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.