டெல்லி: தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் நீண்ட காலமாக காவிரி நீரைப் பங்கிடுவதில் பிரச்னை இருந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தகுந்த அளவில் திறந்து விட வேண்டிய நிலையில், கர்நாடகத்தில் போதிய மழை இல்லை, தண்ணீர் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவானது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது.
இதற்கு பல்வேறு காரணங்களைக் காட்டி தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்டாகாவில் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், இன்று (அக்.13) மதியம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கடந்த மாதம் 15 நாட்களுக்கு 3000 கன அடி நீர் கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே நிர்ணயிக்கபட்டது. அப்படி கொடுக்கபட்டதால் தான் தமிழகத்திற்கு 4,664 கன அடி நீர் வந்துள்ளது. இருப்பினும் தமிழகத்திற்கு தண்ணீர் இன்னும் வரவேண்டி உள்ளதால், நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 16,000 கன அடி நீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க இருக்கிறோம். காவிரி நீருக்காக தொடர்ந்து போராடி கொண்டு தான் இருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 3ஆயிரம் கன அடி நீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஏற்கனவே காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என பரிந்துரைத்து இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது.
கூட்டத்திற்கு பிறகு கர்நாடக அரசின் நீர்வளத்துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மறுப்பதாக தெரிவித்தார். மேலும், 3ஆயிரம் கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்கின்ற உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், உத்தரவை மறுபரிசீலனை செய்ய ஆணையத்தில் முறையிடபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாகை - இலங்கைக்கு நாளை முதல் கப்பல் சேவை.. 10 நாட்கள் மட்டுமே இயக்கம்.. தொடக்க விழாவுக்காக 75% ஸ்பெஷல் ஆஃபர்!