சென்னை: தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தகுந்த அளவில் திறந்து விட வேண்டும் என்பது உள்ள நிலையில், கர்நாடகத்தில் போதிய மழை இல்லை, தண்ணீர் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவானது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட வேண்டாம் என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது. இருப்பினும், இதற்கு கர்நாடக அரசு ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில்தான், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த விஷயத்தில் தலையிட நேர்ந்தது.
அந்த வகையில், இன்று (அக்.13) மதியம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக, தமிழ்நாட்டிற்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வலியுறுத்த உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார். மேலும், நேற்றைய முன்தினம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், வருகிற அக்டோபர் 16 அன்று காலை 8 மணி முதல் 31ஆம் தேதி வரை 3 ஆயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், இதனை ஏற்றுக் கொள்ள கர்நாடக அரசு தயாராக இல்லை என தகவல்கள் வெளி வந்தன. இதனையடுத்து, இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெறும் என அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் அறிவித்து இருந்தார். மேலும், காவிரி நீரை நம்பி, விவசாயத்திற்காக காத்திருக்கும் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகள், இந்த கூட்டத்தின் இறுதி முடிவுக்காக காத்துக் கொண்டுள்ளனர். அதிலும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் காத்திருப்பில் உள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு அரசைக் கண்டித்து கர்நாடகாவிலும், கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டிலும் பல்வேறு போராட்டங்கள், பந்த், முழு கடையடைப்பு ஆகியவை விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளால் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் கருகி வரும் சம்பா பயிர்கள்.. நோயியியல் துறை பேராசிரியர் கூறும் அறிவுரை என்ன?