பெங்களூரு: காவிரி நதிநீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாநில அரசின் தோல்வியைக் கண்டித்து பெங்களூரு, மைசூர் வங்கி வட்டத்தில் பாஜக சார்பில் இன்று (செப்.23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, “இது மக்கள் விரோத, விவசாயி விரோத அரசுக்கு கண்டனம். தமிழகத்தின் ஏஜெண்டாக காங்கிரஸ் கட்சி நடந்து கொண்டது. தமிழகம் கேட்கும் முன் தண்ணீரை விடுவித்து எங்களை சிக்கலில் ஆழ்த்தினார்கள். நிபுணர்கள் வந்து உண்மை நிலையை அறிய வேண்டும்.
தமிழகத்தை திருப்திபடுத்த டி.கே.சிவக்குமார் இப்படி செய்கிறார். திறமை இருந்தால் திருத்தவும். இல்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குப் போங்கள். ஆட்சியில் தொடர உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட விடக்கூடாது. உச்ச நீதிமன்றத்தை சமாதானப்படுத்த வேண்டும். முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடாவும், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் இதையே சொன்னார்கள்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் இருண்ட ஆட்சி நடக்கிறது. மக்களுக்கு முறையாக தண்ணீர் வழங்கும் திறன் காங்கிரஸ் அரசிடம் இல்லை. முறையான மின்சாரம் வழங்கும் திறன் காங்கிரஸ் அரசிடம் இல்லை. மாநிலத்தில் வளர்ச்சி முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு பின்னோக்கிக் கொண்டு செல்கிறார்கள். கர்நாடகாவின் மண்ணையும், நீரையும் காக்க சித்தராமையா தலைமையிலான அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது.
காவிரி விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே இந்த அரசு அலட்சியம் காட்டி வருகிறது. எந்த அர்ப்பணிப்பும் இல்லாமல் பணியாற்றினார்கள். இதனால் வரும் நாட்களில் காவிரிப் படுகையில் உள்ள மக்களுக்கு பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு அரசே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.