மாண்ட்யா :தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலம் மாண்ட்யாவில் விவசாய மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. கர்நாடக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் மனு மீதான விசாரணையை நிராகரித்தது.
அதேபோல் 24 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் இருந்து திறந்து விடக் கோரிய தமிழக அரசின் மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு நிர்பந்திக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக விவசாயிகள் மற்றுன் கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கர்நாடகாவின் மாண்ட்யா மாவட்டத்தில் விவசாய மற்றும் கன்னட அமைப்புகள் கலவர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.