ஹைதராபாத்:கர்நாடகா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்புமனு தாக்கல் வரும் 13 ஆம் தேதி தொடங்கும் நிலையில், வரும் 20 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகும். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதுடன், பரப்புரையில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.
கர்நாடகாவை பொறுத்தவரை கட்சிகளின் வெற்றியை சாதிகளே தீர்மானிப்பதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் லிங்காயத் சமூகத்தினர் ஆவர். சுமார் 70 தொகுதிகளில் இச்சமூக மக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதேபோல் ஒக்கலி சமூகத்தினர் 15 சதவீதம் பேர் உள்ள நிலையில், 35 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இச்சமூக மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்த இரண்டு சமூகங்கள் தான், வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சாதிகளாக பார்க்கப்படுகின்றன. பட்டியல் சமூகத்தை சேர்ந்த 24 சதவீதம் பேர், 50 சட்டமன்ற தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி லிங்காயத் சமூகத்தை சேர்ந்த 54 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் 37 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். 1952 முதல் தற்போது வரை கர்நாடகாவில் 23 பேர் முதலமைச்சர்களாக பணியாற்றி உள்ளனர். இதில் 10 பேர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஒக்கலி சமூகத்தை சேர்ந்த 34 பேர் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் ஆளும் பாஜகவை சேர்ந்தவர்கள் 8 பேர். மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 35 விழுக்காடு பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 99 எம்எல்ஏக்கள் இச்சமூகங்களை சேர்ந்தவர்கள் தான். இதில் பாஜக எம்எல்ஏக்கள் 61 பேர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.