பெங்களூரு:இணைய வழி மோசடிகளில் ஈடுபடும் போலி முகநூல் கணக்குகளால் எந்த விவரமும் இல்லாத சாமானியர்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள், உயரிய பொறுப்புகள் வகிக்கும் தலைவர்களும் பாதிக்கப்படும் சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தின் ஆளுநரின் கணக்கு போன்று ஹேக்கர்களால் போலியாகக் கணக்கு ஒன்று முகநூலில் உருவாக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடக மாநிலத்தின் 13-வது ஆளுநராக தாவர் சந்த் கெலாட் பொறுப்பேற்றார். இந்நிலையில் சமீபத்தில், மர்ம நபர்களால் இவரின் பெயரில் முகநூல் (facebook) பக்கத்தில் கணக்கு தொடரப்பட்டு, இவரது புகைப்படங்கள் மற்றும் சில கருத்துக்களும் பகிரப்பட்டு வந்தது.
இதனை அறிந்த ஆளுநர் தாவர் சந்த், இந்த கணக்கைக் கூடுதல் சிறப்புச் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த பொய்யான கணக்கினால் ஆளுநரின் புகைப்படம் மற்றும் கருத்துகள் தவறாகச் சித்தரிக்கப்பட வாய்ப்புள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்புச் செயலாளர் மற்றும் ஆளுநர், சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் அளித்தனர். இது குறித்து முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டு, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது சைபர் கிரைம் காவல் துறை.