பெங்களூர் (Bengaluru):மைசூர் சாலையில் உள்ள பாரத் பெட்ரோல் நிலையம் அருகே, இரவு நேரத்தில் தமிழக அரசுப் பேருந்துகள் மீது சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை உள்ளது. நேற்று (செப். 11) அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், என்ன காரணத்திற்காக தாக்குதல் நடத்தப்பட்டது, தாக்குதலில் ஈடுபட்டது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாலைவேளையில் சாலையில் நின்று இருந்த தமிழ்நாடு அரசு பேருந்துகள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் வலது பக்க கண்ணாடி சேதமடைந்து உள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து, அந்த பேருந்தின் ஓட்டுநர் குணசேகரன் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் பேருந்து ஓட்டுநர், சாமராஜ்பேட்டை காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். பின்னர், அரசு பேருந்து ஓட்டுநரின் புகாரின் அடிப்படையில், சாமராஜ்பேட்டை காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து தற்போது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் துறையினர், முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக தகவல் தெரிவித்தனர். மேலும், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட பிறகே இந்தச் செயலுக்கான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:Chennai Crime: கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய ஓலா டிரைவர்... அண்ணன் கொலைக்கு காத்திருந்து பழி வாங்கிய தம்பி!