அஜ்மீர் (ராஜஸ்தான்): சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்ட கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், அஜ்மீர் மாவட்டம் பீவாரில் அமைந்துள்ள சாகேத் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அஜ்மீர் மாவட்டம் பீவாரில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்.2-இல் மகேந்திர சிங் ராவத் புகார் அளித்திருந்தார். அதில், "சனாதன தர்மம் டெங்கு, மலேரியா போன்றது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டார்.
மேலும் நான் இந்து மற்றும் மதத்தால் சனாதனியன். நாட்டில் இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறிய இந்த அறிக்கையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது அறிக்கையால் எனது மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கை பல்வேறு மத சமூகங்களுக்கு இடையேயான பரஸ்பர நல்லிணக்கத்தை சீர்குலைத்துள்ளது.
இது மட்டுமல்லாது, சனாதன தர்மத்தை நம்பும் மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மத உணர்வுகளும் புண்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, உதயநிதி ஸ்டாலின் கூறியது குற்றச் செயல்” என்று பாஜக தலைவர் மகேந்திர சிங் ராவத் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.
மகேந்திர சிங் ராவத்தின் இந்த மனுவை விசாரித்த அஜ்மீர் மாவட்ட நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பிவாரில் அமைந்துள்ள சாகேத் நகர் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சாகேத் நகர் காவல் நிலையத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம் 298, 295 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உதவி காவல் ஆய்வாளர் மகேஷ் சந்திராவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சாகேத் நகர் காவல் நிலையப் பொறுப்பாளர் கரண் சிங் கங்காரோட் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"அமர்த்தியா சென் நலமாக உள்ளார்" - சமூக வலைதளத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நந்தனா சென்!