தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் முதல் கைப்பை வங்கியைத் தொடங்கிய நகரம் எது தெரியுமா?

நகரம் முழுவதிலும் பருத்தித் துணிகளாலான கைப்பை வங்கிகளை நிறுவ குவாலியர் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனால் நெகிழிப் பைகளின் பயன்பாடு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Feb 19, 2021, 2:09 PM IST

காட்டன் பேக் நன்மைகள், துணிப்பை நன்மைகள், துணிப் பை, பருத்தி பைகள், நெகிழிப் பைகள், நெகிழி மாசு, நெகிழி அபாயம், நெகிழி ஆபத்து, Carry bag bank to be set up in Gwalior, Cotton bag bank in Gwalior, Bag Bank in Gwalior, Carry bag bank in Gwalior, Plastic bag story, dangerous plastic
Carry bag bank to be set up in Gwalior

குவாலியர் (ம.பி.): பெண்களின் வளர்ச்சிக்கும், சூழலைக் காக்கவும் குவாலியர் மாநகராட்சி நிர்வாகம் பருத்தித் துணிகளாலான கைப்பைகளைக் கொண்ட வங்கியைத் தொடங்கவுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் பருத்தியால் ஆன கைப்பைகளை, மாநகராட்சி நிர்வாகம் சேகரித்து, ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள கைப்பை வங்கிகளில் விற்பனைக்காக வைக்கும். இதனால் நெகிழிப் பைகளின் பயன்பாடும் குறையும் என்றும், பெண்கள் வருவாய் ஈட்ட வசதியாக இருக்கும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அணுகுண்டைவிட ஆபத்தானது நெகிழிப் பைகள்

நெகிழிப் பை பயன்பாடு என்பது, இங்கு வாழும் அனைத்து உயிர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடியதாகும். பல ஆண்டுகள் கடந்தும் மக்காமல் நிலத்தில் கிடந்து, நுண்ணுயிர்கள், மரச் செடிகளைப் பாடாய்ப்படுத்தும். சாலையில் கிடக்கும் இதனை அறியாமல் உண்டு விலங்குகள் மரணப்படுக்கைக்குச் செல்லும்.

இதனை அழிப்பதாக எண்ணி, பலர் நெகிழிப் பைகளை எரிக்கும்போது, அதிலிருந்து ஏற்படும் புகையானது மானிடர்களுக்கு புற்றுநோய் போன்ற கொடுமையான வியாதிகளைக் கொடுத்துச் செல்லும்.

நெகிழியின் ஆபத்துகள்

யார் இந்தப் பருத்திப் பைகளை உருவாக்குவார்கள்?

நகரில் ஆங்காங்கே இருக்கும் சுய உதவிக் குழுக்களிடம் இந்தப் பணிகள் ஒப்படைக்கப்படும். இதனால் பெருவாரியான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவர்கள் தயாரித்த பைகளை மாநகராட்சி நிர்வாகம் சேகரித்து, பை வங்கிகளில் விற்பனைக்காக வைக்கும். என்ன விலைக்கு இவை வாங்கப்படும் அல்லது விற்கப்படும் என இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், இதன் விலை மிகக் குறைவாக இருக்கும் என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்திப் பைகளால் மாநகராட்சிக்கு என்ன நன்மை

கடந்த சில ஆண்டுகளாக, சாலையோரத்தில் இருக்கும் நெகிழிப்பைகள், குப்பைத் தொட்டியில் இருக்கும் நெகிழிகளை உண்டு விலங்குகள் அவ்வப்போது இறந்துவிடுகின்றன; அது தடுக்கப்படும்.

மேலும், நிலத்தடி நீர் மேலாண்மை மேம்படும் எனவும், கழிவுநீர் வடிகால்களில் ஏற்படும் அடைப்புகள் குறையும் எனவும் மாநகராட்சி நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

நெகிழி வகைகளை அறிந்துகொள்ளுங்கள்

  1. அதிக அடர்த்தி உள்ள பாலி எத்திலின்கள் - குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட பாட்டில்கள்,
  2. குறைந்த அளவு அடர்த்தி உள்ள பாலி எத்திலின்கள் - கேரி பைகள்.
  3. பாலி எத்திலின் டெரித்தாலேட் - குளிர்பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள்.
  4. பாலிப்பிரோப்பலின் - குளிர்பானம் உறிஞ்சும் குழாய்கள்.
  5. பாலிசிஸ்ட்ரேன் - உணவுப் பொருள்கள், நுரையணித் துணிகள் போன்ற பேக்கிங்கள்.
  6. பாலிவினைல் குளோரைட் - மின்சார காப்பர் ஒயர்கள்
  7. அக்ரிலோ - ஹைட்ரேட் பூட்டிடேன் சிஸ்ட்ரேன் - மிகவும் கடினமான பொருள்கள் தயாரிப்பு மற்றும் கார் வாகனங்கள் பொருள்கள் தயாரிப்பு.
  8. பாலி கார்பனேட் - நெகிழிக் குறுந்தகடு போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன.
    கடலில் கிடக்கும் நெகிழிக் குப்பை

நெகிழியின் தீமைகள்

  • பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) நெகிழிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.
  • வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருள்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.
  • நெகிழியாலான குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவை சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்துக்கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.
  • நம் அன்றாட வாழ்வில் தூக்கியெறியப்படும் பிரிக்காத குப்பைகளினால் கொசுக்களால் பரவும் கொடிய நோய்கள் உருவாக காரணமாகிறது.
  • நெகிழி உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவுப்பொருள்களால் உடலுக்கு பல ஊறுவிளைகிறது.
  • நெகிழிப் பைகளால், கழிவுநீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் நெகிழி காரணமாகிறது.
  • நெகிழிப் பைகள் மற்றும் தூக்கி எறியப்பட்ட நெகிழி பேக்கேஜிங் பொருள்கள் மழைநீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.

கழிவுகள் மக்கும் காலம்

  • நெகிழிப் பைகள் (100-1000 ஆண்டுகள்)
  • பஞ்சுக் கழிவுகள் (1-5 மாதங்கள்)
  • காகிதம் (2-5 மாதங்கள்)
  • உல்லன் சாக்ஸ் (1-5ஆண்டுகள்)
  • டெட்ரா பேக்குகள் (5ஆண்டுகள்)
  • தோல் காலணி (25-40 ஆண்டுகள்)
  • டயபர் நாப்கின் (500-800 ஆண்டுகள்)
    சென்னையில் குவிந்துகிடக்கும் நெகிழிப் குப்பை

நெகிழியைத் தவிர்த்தல்

  • மளிகைப் பொருள்கள், பால், காய்கறி, துணிக்கடை, மருந்துக் கடை, மின்னணு சாதனக் கடைகள் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது தனியொரு சேமிப்பு துணிப்பையை வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பதப்படுத்தப்பட்ட அல்லது நெகிழியில்அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
  • அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் நெகிழித் தட்டுகள், கப்புகள் உடன் அதைச் சார்ந்த பொருள்களைத் தவிர்த்தல் வேண்டும்.
  • காப்பர் ஒயர்கள் போன்றவைகளைக் கண்ட இடத்தில் எரித்தல் கூடாது.

ABOUT THE AUTHOR

...view details