டெல்லியின் காஞ்சவாலாவில் நடந்த விபத்து போலவே மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டெல்லியின் கேஷ்வபுரம் பகுதியில் 5 பேருடன் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று முன்னால் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டி மீது மோதி உள்ளது. இதனால் ஸ்கூட்டியில் பயணித்த ஒருவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். மற்றொருவர் காரின் முன்பக்கத்தில் ஸ்கூட்டி உடன் சிக்கியுள்ளார்.
இதனை கண்டுகொள்ளாத கார் ஓட்டுநர், விபத்தில் சிக்கிய நபர் உடன் 300 மீட்டர் தூரம் காரை இயக்கியுள்ளார். அந்த நேரத்தில் ரோந்துப்பணியில் இருந்த காவல் துறையினர் இதைக்கண்டு பிரேனா சோக் - மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட இடத்தில் காரை துரத்தி பிடித்து நிறுத்தியுள்ளனர்.
இதில் காரில் பயணித்த இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். மற்றவர்கள் தப்பியோடியுள்ளனர் இந்த சம்பவம் நடந்த 11 நொடிகளுக்குள் காரை காவல் துறையினர் பிடித்ததாக வடக்கு - மேற்கு டெல்லி காவல் துணை கண்காணிப்பாளர் உஷா ரங்கானி தெரிவித்துள்ளார். இதனையடுத்து விபத்தில் சிக்கிய நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் ஸ்கூட்டி ஓட்டி வந்த கைலாஷ் பாட்நகர் என்பவர் உயிரிழந்தார். அவருடன் பயணித்த சுமித் காரி என்பவர் மட்டும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அதேநேரம் பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட சுவாச சோதனையில், இருவரும் மது அருந்தியது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மத்தியப் பிரதேசத்தில் 2 ராணுவ விமானங்கள் விபத்து