பஞ்சாப்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அந்த வகையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக தினசரி ஊரடங்கு விதிக்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, வார நாள்களில் நாள்தோறும் மாலை 6 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், வார இறுதி நாள்களில் அதாவது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் திங்கள் காலை 5 மணிவரை வார இறுதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மறு அறிவிப்பு வரும்வரை தொடரும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. கரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், தேவையில்லாமல் வீட்டைவிட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. பிராணவாயு தட்டுப்பாடு, படுக்கைகள் பற்றாக்குறையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுவருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,812 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் ஒரு கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 123 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.