டெல்லி:இந்தியாவில் சிகரெட்டுகள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 12.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில், ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிகரெட் விற்பனையைப் பொறுத்தவரை சில்லறை விற்பனை முக்கியப் பங்கு வகிக்கிறது. கடைகளில் ஒற்றை சிகரெட்டாக விற்கப்படுவதில் தான் கனிசமான மக்கள் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். கடைகளுக்குச் சென்று ஒற்றை சிகரெட்டை வாங்குவது மிகவும் எளிதாக உள்ளது. புகைப்பிடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க இதுபோன்ற சில்லறை விற்பனையும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
தரவுகள்படி, இந்தியாவில் தினசரி புகைப்பிடிப்பவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது, 46 புள்ளி 8 சதவீதம் பேர் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள். 32 சதவீதம் பேர் 35 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. புகைப்பிடிப்பவர்களில் இளைஞர்கள் மிக அதிகம்.
15 சதவீதம் பேர், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்றும் புகைப்பிடிப்பவர்களில் 5.5 சதவீதம் பேர் மட்டுமே 45 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதில், 55 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.