டெல்லி:திரையரங்கிற்குள் பார்வையாளர்கள் உணவுகள் மற்றும் திண்பண்டங்கள் கொண்டு வர அனுமதி அளிக்கப்படுவது இல்லை. இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பார்வையாளர்கள் வெளி உணவுகளை திரையரங்கிற்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரையரங்கிற்குள் பார்வையாளர்கள் வெளி உணவு மற்றும் குளிர்பானங்களை கொண்டு செல்ல அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, திரையரங்கு மற்றும் மல்டி ஃபிளக்ஸ் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இதுகுறித்த விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்விற்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் திரையரங்கு என்பது தனிப்பட்ட உரிமையாளருக்குச் சொந்தமான இடமாகும். திரையரங்குகளில் குளிர்பானம், தின்பண்டங்கள் விற்பது அவரின் தனிப்பட்ட முடிவு. எனவே, திரையரங்கிற்குள் வெளி உணவுகளை கொண்டு செல்ல தடை விதிக்க உரிமையாளர்களுக்கு உரிமை உண்டு என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேநேரம், திரையரங்குகளில் விற்கப்படும் தின்பண்டங்களை கட்டாயம் வாங்கியாக வேண்டுமென பார்வையாளர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும்; மேலும் திரையரங்குகளில் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கான உணவை எடுத்துச் செல்ல திரையரங்கு உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:21 வயது இளம்பெண் ஐ.சி.சி.யின் பயிற்சியாளராக தேர்வாகி சாதனை!