ஐதராபாத்:திரிபுராவின் கடைசி மகாராஜாவும், திரிபுரா பூர்வகுடிகள் முற்போக்கு கூட்டணியான திமோக கட்சியின் தலைவருமான பிரத்யாத் மணிகிய தேபர்மாவை சந்திக்க காங்கிரஸ் மேலிட உறுப்பினர்கள் அங்கு விரைந்துள்ளனர். 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப் பேரவைக்கு கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இன்று (மார்ச்.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தில் பாஜக 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரிகள் கூட்டணியுடன் களமிறங்கி உள்ள காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், திரிபுராவின் கடைசி மகாராஜாவும், திரிபுரா பூர்வகுடிகள் முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவருமான பிரத்யாத் மணிகிய தேபர்மா, 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க ஏதுவான சூழல் நிலவுகிறது. அதேநேரம் காங்கிரஸ் மற்றும் திமோக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜிதேந்திர சிங், திமோக கட்சி தலைவர் பிரத்யாத் மணிகிய தேபர்மாவுக்கு நன்கு பரீட்சயமானவர் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தலைமையிலான குழு, திரிபுரா சென்று தனியார் ரெசார்டில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.