புதுச்சேரி: குருமாம்பேட் அமைதி நகர்ப் பகுதியில் வசித்துவரும் ஒரு பெண்ணின் 17 வயது மகள் கல்லூரியில் படித்துவந்தார். தந்தை இறந்துவிட்ட நிலையில், சிறுமி தனது தாயுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், சிறுமியின் தாய் மார்ச் 23ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
பலமுறை பாலியல் வன்புணர்வு
இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வுசெய்தார். அதனைக் காணொலியாகவும் எடுத்து மிரட்டி தொடர்ந்து பலமுறை அந்தச் சிறுமியை அருண்குமார் பாலியல் வன்புணர்வுசெய்துள்ளார். இதனால் அச்சிறுமி உடல் அளவிலும் மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து சிறுமி கேரளாவில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்குச் சென்றார். அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அவரது சித்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதித்தபோது அவர் பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது தெரியவந்தது.
கேரள காவல் துறையும் புதுச்சேரி காவல் துறையும்
இது குறித்து சித்தி சிறுமியிடம் கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி கதறி அழுதுள்ளார். இந்நிலையில் ஜூன் 19ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
பின் சிறுமியின் சித்தி இது குறித்து திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அருண்குமாரை கைதுசெய்த காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமியின் தாய் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை வழக்குப்பதிவுகூட செய்யாமல் அப்பகுதி காவல் துறையினர் மிகவும் அலட்சியப்போக்குடன் செயல்படுகின்றனர்.