டெல்லி: இந்தியாவில் சட்டப்பூர்வமாக ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான வயது 21. பெண்கள் திருமண செய்து கொள்வதற்கான வயது 18 என்று இருந்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி கடந்தாண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சி உரையில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்காக ஜெயா ஜெட்லி தலைமையிலான நிதி ஆயோக் பணிக்குழு அமைக்கப்பட்டது.
இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது என தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கான உண்மையான நோக்கம் அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது என்றும், தற்போது இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் 2.2 ஆக உள்ளது. பணிக்குழுவின் பரிந்துரைகள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல என்று ஜெயா ஜெட்லி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், பெண்களின் திருமண வயதை 18இல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா கொண்டுவரப்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: VIJAY DIWAS 2021: போர் நினைவுச் சின்னத்தில் ஸ்டாலின் மரியாதை