டெல்லி:திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய வட கிழக்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் உடன் சேர்த்து, தமிழ்நாடு, அருணாசலப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் மகாராஷ்டிராவில் மட்டும் 2 தொகுதிகளுக்கும், மற்ற 4 மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கும் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை நடத்தியது.
இடைத் தேர்தல் நடைபெற்ற 6 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று (பிப்.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றன. இதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கிய திமுக தலைமையிலான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதேபோல் மேற்கு வங்கத்தில் சாகர்தாகி தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பைரன் பிஸ்வாஸ் வெற்றி பெற்றார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தேபாஷிஷ் பானர்ஜியை விட 22 ஆயிரத்து 980 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார். கடந்த 12 ஆண்டுகளாக இடைத்தேர்தலில் தோல்வியே சந்திக்காத திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள லும்லா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ஷெரிங் லாமு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம், ராம்கார் தொகுதியில் பாஜக கூட்டணியான அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் யூனியன் கட்சி வேட்பாளர் சுனிதா சவுத்ரி தன்னை எதிர்த்து களம் கண்ட ஜார்கண்ட் முக்திமோர்ச்சா ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பஜ்ரங் மஹட்டோவை 21 ஆயிரத்து 970 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிராவில் உள்ள கஸ்பா பெத் மற்றும் சிஞ்ச்வாடு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் கஸ்பா பெத் தொகுதியில் ஆளும் சிவசேனா கட்சியின் ஷிண்டே ஆதரவுடன் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹேமந்த் நாராயண் ரசானே தோல்வியைத் தழுவினார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் தாங்கேகர் ரவீந்திர ஹேமராஜ் 10 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதேநேரம் சிஞ்ச்வாடு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அஷ்வினி லட்சுமன் ஜெகதீப் வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் நானா கடேயை விட 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 5 மாநிலங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக காங்கிரஸ் கட்சிகள் தலா 3 இடங்களில் கைப்பற்றி உள்ளன.
இதையும் படிங்க:அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை