ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பாஜகவினர் புகார் அளித்தனர்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியதால், சோரனை எம்எல்ஏ பதிவியிலிருந்து தகுதி நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. அதன்படி, ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், சோரனின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். தன் மீதான ஊழல் புகார் பாஜகவினரின் திட்டமிட்ட சதி என்றும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கும் பாஜகதான் காரணம் என்றும் சோரன் குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.