ஜார்கண்ட்:ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் பகுதியில் கடந்த 5ஆம் தேதி தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காப்பீட்டு உரிமம் பெறுவதற்கான முன்னெடுப்புகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லாத வகையில் அந்த பேருந்தின் காப்பீட்டு உரிமத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இந்த விவகாரம் குறித்துக் கூடுதலாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது வணிக ரீதியாகப் பேருந்திற்குக் கட்ட வேண்டிய காப்பீட்டுத் தொகை கூடுதல் என்பதால், அதைப் புறக்கணிப்பதற்காக அந்த வாகனத்தின் உரிமையாளர் வேண்டுமென்றே இரு சக்கர வாகனத்திற்கான காப்பீட்டுப் பணத்தைச் செலுத்தி பேருந்திற்கான காப்பீட்டு உரிமத்தைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக, JH 07H 2906 என்ற பதிவெண் கொண்ட பேருந்திற்கு, 1130003123010240021524 என்ற எண்ணில் காப்பீடு உரிமம் இருந்துள்ளது. இதை ஆய்வு செய்தபோது அந்த காப்பீடு உரிமம் அதே எண்ணுடன் தொடர்புடைய இருசக்கர வாகனத்தினுடையது எனத் தெரியவந்துள்ளது.