பெங்களூரு:கர்நாடகா-மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னை காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து பெலகாவிக்கு செல்லும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பெலகாவி மத்திய பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த மராத்திய அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சிலர் கர்நாடகாவுக்குச் சொந்தமான பேருந்துகளில் இன்று (நவம்பர் 25) கருப்பு மையை பூசினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன்காரணமாக மகாராஷ்டிராவை சேர்ந்த பேருந்துகளுக்கு கர்நாடகாவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று போலீசார் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெலகாவி நகர மைய பேருந்து நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டுவந்த 300-க்கும் மேற்பட்ட பேருந்துகளை அம்மாநில போக்குவரத்து கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இருந்து பெலகாவி, சிக்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.