டெல்லி:2022-23 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.31) தொடங்குகிறது. முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நாளை(பிப்.1) ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். காகித பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல்
குடியரசு தலைவரின் உரையில் ஒன்றிய அரசு கடந்தாண்டு செயல்படுத்திய சாதனைகள், வரும் நிதியாண்டில் ஒன்றிய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம்பெறும்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிப்ரவரி 2ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: Punjab Elections 2022: இரு தொகுதிகளில் களமிறங்கும் முதலமைச்சர் சன்னி