டெல்லி:நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நாட்டில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக மூலதன செலவினம் 37.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, ரூ.7.28 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாகும். 2019-20ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட மூலதன செலவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
இதில் நாட்டில் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ரயில்வே, பாதுகாப்பு போன்ற செலவினங்களும் அடங்கும். அடுத்த 25 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, முதலீடு, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தும். மாநிலங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக, 2022-23ஆம் நிதியாண்டில் நிதிக்கூட்டாட்சி முறையில், மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டு, 1.3 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். இது சென்ற நிதியாண்டை விட, 30 சதவீதம் அதிகம். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாகும்.