மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அதில், காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கப்பட்டபோதிலும், உரிமையாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், “முதலீடு செய்யும் நிறுவனங்களின் இயக்குநர்கள் பெரும்பான்மையாக இந்தியர்களாக இருக்க வேண்டும். அதேபோல், ஒரு குறிப்பிட்ட அளவு பொது இருப்பு (General reserve) வைத்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டு வைப்பு தொகையை 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்த இந்தக் கூட்டத்தொடரிலேயே திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், "கடன் செலுத்தாதவர்களின் சொத்துக்களை நிர்வகிக்க சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் மற்றும் சொத்து நிர்வாக கம்பெனி ஆகியவை உருவாக்கப்படும். அவற்றின் மூலம் மாற்று மூதலீடு ஈட்டப்படும்.
வங்கி சாரா நிதி நிறுவனத்திலிருந்து கடன் பெறுபவர்களின் நலன் காக்கப்படும். நிதி சொத்துக்களின் பாதுகாப்பு, புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு வட்டி சட்டத்தின் படி, கடனை திருப்பி வசூல் செய்தற்கான கடன் அளவு 50 லட்சத்திலிருந்து 20 லட்சமாக குறைக்கப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.