புதுடெல்லி: உலகம் முழுக்க உள்ள புத்த பிக்குகள் மற்றும் பௌத்தர்களால் இன்று புத்த பூர்ணிமா உற்சாகமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைத்து நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள புத்த பகவானை பின்பற்றுபவர்களுக்கும் புத்த பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்.
பகவான் புத்தர் மனிதகுலத்திற்கு அகிம்சை, கருணை மற்றும் சகிப்புத்தன்மையின் பாதையைக் காட்டினார். அவரது போதனைகள் இன்று மிகவும் பொருத்தமானவை. புத்தபெருமான் காட்டிய வழியை அனைவரும் பின்பற்ற உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “புத்த பூர்ணிமா அன்று புத்தபெருமானின் கொள்கைகளை நினைவு கூர்வோம், அவற்றை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். புத்தபெருமானின் எண்ணங்கள் நமது இப்புவியை மிகவும் அமைதியானதாகவும், இணக்கமானதாகவும், நிலையானதாகவும் மாற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, “நாட்டு மக்களுக்கு புத்த பூர்ணிமாவின் நல்வாழ்த்துக்கள். அவருடைய போதனைகள் நமது துக்கங்களுக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து, உயிரினங்களை துன்பத்திலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் என்ற சவால் உருவாகியுள்ளது: பிரதமர் மோடி