டர்ன் டரன் (பஞ்சாப்): பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) பாகிஸ்தானின் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை (drone) நேற்று (ஜூன் 23) சுட்டு வீழ்த்தினர். இது குறித்து எல்லை பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து எல்லை பாதுகாப்பு படை பிரிவின் பஞ்சாப் எல்லைப் பிரிவு, “பஞ்சாப் மாநிலத்தின் டர்ன் டரன் மாவட்டத்தில் லக்ஹானா கிராமத்தில் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் ட்ரோனை (DJI Matrice 300 RTK) எல்லை பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தானின் முயற்சியை மீண்டும் எல்லை பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது” என ட்வீட் செய்து உள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனை தேடும் பணியில் எல்லை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை காலை பஞ்சாப் காவல் துறையுடன் இணைந்து ஈடுபட்டனர். அப்போது இன்று (ஜூன் 24) காலை 8.10 மணியளவில், லக்ஹானா கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய வயலில் இருந்து உடைந்த நிலையில் ஒரு ட்ரோன் மீட்கப்பட்டது என எல்லை பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உடைந்த நிலையில் மீட்கப்பட்ட ட்ரோன் மாடல் DJI Matrice 300 RTK சீரிசின் ஆகும்.
சமீபகாலமாக பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ட்ரோன்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. போதைப் பொருள் பரிமாற்றத்திற்காக இவ்வாறு அத்துமீறி நுழையும் ட்ரோன்களை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.