பிகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி முடிவடைவதால், அம்மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இன்று (நவ்-3) காலை 7 மணிக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
பிகாரில், தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முகக்கவசம், தகுந்த இடைவெளி, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை வழங்குதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவு மையத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க காவலர்கள், எல்லை பாதுகாப்பு படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.