கூட்ச் (குஜராத்) : பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்த குற்றஞ்சாட்டில் இந்திய துணை ராணுவ படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் பயங்கரவாத தடுப்பு அலுவலர்களால் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ வீரர் முகம்மது சஜ்ஜத் (Mohammad Sajjad) யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரின் ரஜோரி ( Rajouri) மாவட்டத்தில் உள்ள சரோலா (Sarola) என்ற கிராமத்தில் பிறந்தவர்.
பாகிஸ்தானில் 46 நாள்கள்..
இவர் எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 2012ஆம் ஆண்டு காவலர் ஆக பணியில் சேர்ந்தார். இதற்கு முன்னதாக 2011, டிச.1 பாகிஸ்தானுக்கு அட்டாரி ரயில்வே நிலையத்திலிருந்து (Attari railway station) சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் (Samjhauta Express) ரயிலில் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
அங்கு 46 நாள்கள் பொழுதை கழித்த இவர், பல்வேறு இடங்களுக்கு சுற்றிவிட்டு ஜனவரி 16ஆம் தேதி 2012 இந்தியா திரும்பியுள்ளார். இது குறித்த தகவல்கள் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலர்களுக்கு கிடைத்தவுடன் சஜ்ஜத் விவகாரத்தில் உஷாராகியுள்ளனர்.
தொடர்ந்து, சஜ்ஜத் யார் யாருடன் தொடர்பில் உள்ளார், அவருக்கு உதவும் நபர்கள் யார், அவர் யார் யாருக்கு உதவுகிறார் என்றெல்லாம் தகவல்களை சேகரித்துள்ளனர்.
இரு மொபைல் போன்கள்- வாட்ஸ்அப் உரையாடல்
இந்நிலையில் சஜ்ஜத் இரு மொபைல் போன்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அந்த மொபைல் போன்கள் மூலம் தனது சகோதர் வாஜித் மற்றும் தன்னுடன் வேலைபார்க்கும் இக்பால் ராஷித் ஆகியோருடன் பேசியுள்ளார்.