சிவமோகா : 40 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் அரசியலில் இருந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா விலகி உள்ள நிலையில் அவர் 7 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ஷிகாரிபுரா தொகுதியில் அவருடைய இரண்டாவது மகன் பி.ஒய். விஜயேந்திரா போட்டியிடுகிறார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.
தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக கர்நாடக அரசியலை கட்டிப்போட்ட மூத்த அரசியல் தலைவர் பி.எஸ். எடியூரப்பா இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக அவர் ஏழு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஷிகாரிபுரா தொகுதியில் அவரது இரண்டாவது மகன் பி.ஒய். விஜயேந்திரா போட்டியிடுகிறார்.
ஏற்கனவே எடியூரப்பாவின் மூத்த மகன் ஒய். ராகவேந்திரா, சிவமோகா மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். சகோதரரைத் தொடர்ந்து பி.ஒய். விஜயேந்திராவும் முதல்முறையாக தேர்தல் களத்தில் குதித்து உள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் விஜயேந்திரா பாஜக மாநில துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார்.