தெலங்கானா: ஹைதராபாத்தில் கடந்த புதன்கிழமை (அக்.26) தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற தேர்தல் விவாதத்தில் குத்புல்லாபூர் தொகுதியின் பாரத ராஷ்டிர சமிதி (BRS) சட்டமன்ற உறுப்பினர் கே.பி.விவேகானந்தா மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிட உள்ள பா.ஜ.கட்சி வேட்பாளர் கே.ஸ்ரீசைலம் கவுட் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தின் போது பாஜக வேட்பாளர் ஸ்ரீசைலம் கவுட்டை பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.விவேகானந்தா தொண்டையைப் பிடித்துத் தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க:ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; கருக்கா வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்!
தொலைக்காட்சி விவாதத்தின் போது, பாஜக வேட்பாளர் மற்றும் பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர் இடையே கடுமையான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், பாஜக வேட்பாளர் கே.ஸ்ரீசைலம் கவுட் நில அபகரிப்பாளர் என பிஆர்எஸ் வேட்பாளர் கே.பி.விவேகானந்தாவை கூற, இதனால் மிகுந்த கோபம் அடைந்த அவர் பாஜக வேட்பாளர் கவுட் தொண்டையைப் பிடித்துத் தாக்கினார். இதனையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் காவல்துறையினர் இருவரையும் பிரித்தனர். பா.ஜ.க வேட்பாளர் ஆளும் பிஆர்எஸ் எம்எல்ஏவால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாஜக வேட்பாளர் மற்றும் பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற மேடையை நோக்கி ஓடிவந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள முயன்றனர். இதனையடுத்து, காவல்துறையினர் இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தினர். மேலும், இச்சம்பவத்தின் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியது. பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர் பாஜக வேட்பாளரைத் தாக்கிய சம்பவம் குறித்து பாஜகவினர் கண்டம் தெரிவித்துள்ளனர்.