ஹைதராபாத்:பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முதலமைச்சருமான சந்திரசேகர ராவ், நாளை (ஜூன் 26) மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாள் சுற்றுப் பயணமாக மகாராஷ்டிரா செல்ல உள்ளார். நாளை காலை அங்கு செல்லும் சந்திரசேகர ராவ், பந்தாரிபூர் மற்றும் துல்ஜபூர் ஆகிய கோயிகளில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக நாளை காலை 10 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படுகிறார். பின்னர், சோலாபூரில் இருந்து சாலை மார்க்கமாக பந்தார்பூர் மற்றும் துல்ஜபூர் ஆகிய இடங்களுக்குச் செல்கிறார். இவ்வாறு செல்லும்போது அவர் உடன் மற்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் மிகப்பெரிய கான்வாய் பேரணியாக செல்ல இருக்கின்றனர்.
மேலும், கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், 400 கார்களின் அணிவகுப்பில் கேசிஆர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர், சாலை மார்க்கமாக நாளை மாலை சோலாப்பூரை அடைந்து, அன்று இரவு அங்கேயே தங்குகிறார். அப்போது, பாகிராத் பால்கே உள்பட பல முக்கிய தலைவர்கள் சந்திரசேகர ராவ் முன்னிலையில் தங்களை பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி உடன் இணைத்துக் கொள்ள உள்ளனர் என தகவல் கிடைத்து உள்ளது.
அது மட்டுமல்லாமல், கைத்தறி வேலைகளைப் பார்வையிடச் செல்லும் கேசிஆர் உடன் மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த கைத்தறி பணியாளர்கள் செல்ல உள்ளனர். இதனையடுத்து, நாளை மறுநாள் சோலாப்பூர் மாவட்டத்தின் பந்தர்பூரில் உள்ள வித்தல் ருக்மணி கோயிலுக்குச் செல்கிறார்.