டெல்லி: இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி - புனே செல்ல ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் நேற்று (ஜன.12) மாலை தயாராக இருந்தது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிறுவனத்திற்கு மாலை 5.30 மணிக்கு மேல் மிரட்டல் விடுக்கப்பட்டது.
மர்ம நபரின் மிரட்டலை அடுத்து விமானம் உடனடியாக ஓடுபாதையை விட்டு தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் போலி என கண்டறியப்பட்டது.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சிக்னல் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்ட போலீசார், டெல்லியைச் சேர்ந்த அபினவ் பிரகாஷ் என்பரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் அபினவ் பிரகாஷ் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் டிக்கெட் கவுன்ட்டர் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.