உதம்பூர்:வடமாநிலங்களில் வசந்த கால அறுவடையின் தொடக்கமாக ஏப்ரல் 13 மற்றும் 14ம் தேதிகளில், பைசகி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனர். உதம்பூர் அருகே உள்ள பேனி சங்கம் பகுதியிலும், குடும்பத்தினருடன் ஏராளமானோர் திரண்டனர்.
அப்போது, அங்குள்ள ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஆற்றுக்குள் விழுந்த பலர் காயம் அடைந்தனர். கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் அலறினர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படை வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக செனானி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.