ஆற்றுப் பாலம் இடிந்து கோர விபத்து பீகார்:தர்பங்கா நகரில் பாயும் கமலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் திடீரென இடிந்து விழுந்தது. மணல் ஏற்றிச் சென்ற லாரியின் பாரம் தாங்காமல், பாலம் இடிந்து இரண்டு துண்டுகளானது. பாலத்தின் ஒரு நுனியில் சிக்கிக் கொண்டு லாரி தலை கீழாக தொங்கியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பாலம் உடைந்து லாரி அந்தரத்தில் தொங்கும் சம்பவம் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் பாலத்தில் சிக்கிக் கொண்ட லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆற்றுப் பாலத்தின் வழியாக அருகில் உள்ள கிராமங்களுக்குப் போக்குவரத்து நடந்து கொண்டு இருந்த நிலையில், திடீரென பாலம் உடைந்தது கிராம மக்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் கோஷம் எழுப்பினர்.
ஏற்கனவே பாலம் சிதிலமடைந்து காணப்படுவதால், கடந்த 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் நிதிஷ் குமார் புதிதாக பாலம் அமைக்க அடிக்கல் நாட்டிச் சென்றதாகவும், அதன் பின் சீரமைப்பு அல்லது புதிய பாலம் அமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர். போர்க்கால அடிப்படையில் தங்கள் கிராமத்திற்கு புதிய பாலம் அமைத்துத் தரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:Priyanka Gandhi: கன்னட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் - பிரியங்கா காந்தி