சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த திருமண விழாவில் கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய சொகுசு கார்கள் அணிவகுத்து செல்ல இறுதியாக மாட்டு வண்டியில் திருமண ஜோடி அழைத்து செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
சூரத்தைச் சேர்ந்த பாரத் வகசியா என்ற பாஜக பிரமுகரின் மகனின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமண விழாவில் அணிவகுப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆடி, பென்ஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த 100 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச்சென்றது காண்போரின் கண்களை கொள்ளை கொண்டது.
இந்நிலையில், இறுதியாக மணப்பெண் மற்றும் புதுமாப்பிள்ளை மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. தனது மகனின் திருமணத்தை ஆடம்பரமாகவும், அதே நேரம் வித்தியாசமான முறையில் வெகு விமரிசையாகவும் நடத்த பாஜக பிரமுகர் பாரத் திட்டமிட்டுள்ளார்.
அதன் விளைவாக நடந்தது தான் இந்த கார் அணிவகுப்பு திருவிழா. அதேநேரம் குஜராத் பாரம்பரியத்தில் புதுமணத் தம்பதிகளை மாட்டு வண்டியில் வைத்து அழைத்துச்செல்வது வழக்கமாக கருதப்படுகிறது. இந்த வழக்கத்தையும் கைவிட விரும்பாத பாரத், ஊர்வலத்தில் ஆடி, பென்ஸ் உள்ளிட்ட 100 விலையுயர்ந்த சொகுசு கார்களை அணிவகுத்துச் செல்ல வைத்து, பின்னால் புதுமணத் தம்பதியை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றுள்ளார். 100 கார்களுக்கு மத்தியில் பாரம்பரிய மாட்டு வண்டியில் புதுமணத் தம்பதி அழைத்துச் செல்லப்படும் வீடியோவை இணையதளவாசிகள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க:"சமாஜ்வாதி ரவுடியிசத்தை ஆதரிக்கிறது" - யோகி ஆதித்யநாத்தின் பேச்சால் உ.பி. சட்டப்பேரவையில் அமளி!