பீகார்:மணமகன் கருப்பாகவும் வயது முதிர்ந்தவராகவும் இருப்பதாகவும் கூறி தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மணப்பென் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பீகாரில் அரங்கேறி உள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் ரசல்பூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் மண்டல் என்பவரது மகள் கிட்டு குமாரிக்கும், தனோரா பகுதியைச் சேர்ந்த வீரேந்திர சிங்கின் மகன் நிலேஷ் குமார் சிங்கிற்கும் திருமணம் நடைபெறவிருந்தது. பூரண அலங்காரத்துடன் மணமக்கள் மேடையில் அமர்ந்திருந்த நிலையில், திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அந்த மகிழ்ச்சியான தருணங்களை இரு வீட்டாரும் வீடியோவாகவும் புகைப்படமாகவும் பதிவு செய்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து, மணமகளும் மணமகனும் மாலை மாற்றும்படி பெரியோர்கள் அறிவுறுத்தினர். அப்போது, திடீரென மணமகனை திருமணம் செய்து கொள்ள முடியாது என மணமகள் கிட்டு குமாரி மறுத்துவிட்டார். இதைக் கேட்டு, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்த பெண்ணை சமாதானப்படுத்தி, மாப்பிள்ளையின் கழுத்தில் மாலையைப் போடும்படி வற்புறுத்தினர்.
ஆனால், அந்த மணப்பெண் மாப்பிள்ளைக்கு மாலையிடவும், நெற்றியில் திலகம் இடவும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதையடுத்து, திருமணம் செய்ய மறுப்பதற்கான காரணம் குறித்து உறவினர்கள் கேட்டனர். அப்போது, மணமகன் தன்னை விட மிகவும் வயது முதிர்ந்தவராக இருப்பதாலும், கருப்பாக இருப்பதாலும் அவரை திருமணம் செய்ய தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.