தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசாம் முதலமைச்சர், காவல் உயர் அலுவலர்கள் மீது கொலை முயற்சி வழக்கு! - Himanta Biswa Sarma

மிசோரம் மாநிலத்தில் உள்ள கொலாசிப் மாவட்டத்தின் வெய்ரன்ட் கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, 4 காவல் உயர் அலுவலர்கள், இரு அலுவலர்கள் மீது மிசோரம் போலீஸார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Assam CM
Assam CM

By

Published : Jul 31, 2021, 9:48 PM IST

அய்ஜாவால்: அசாம் முதலமைச்சர், காவல் உயர் அலுவலர்கள் மீது கொலை முயற்சி வழக்கு, குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மிசோரம் காவல்துறை ஐஜி ஜான் நேஹாலியா தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் சுமார் 164 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றன.

இதில் அசாம் மாநிலத்தில் பாரக் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கச்சார், கரிம்கஞ்ச், ஹாய்லாகன்டி ஆகிய மாவட்டங்களும், மிசோரம் மாநிலத்தின் அய்சவால், கொலாசிப், மமித் ஆகியவை எல்லைப் பகுதிகளைப் பிரிக்கின்றன.

எல்லை தொடர்பான சர்ச்சை நீடிப்பதால் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதல் தீவிரமானது.

அசாம் மாவட்டமான சச்சாரின் லைலாபூரில் மிசோரம் அரசு அலுவலர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி ஒரு கரோனா பரிசோதனை மையத்தை அமைத்தனர்.

இதற்கு அசாம் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்போது அப்பகுதியில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அங்கு ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இரு மாநில எல்லையில் மீண்டும் கடந்த 26ஆம் தேதி வன்முறை வெடித்தது. இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், போலீஸாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கிச் சூடும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

அசாம் முதலமைச்சரும், மிசோரம் முதலமைச்சரும் வெளிப்படையாக வாக்குவாதம் செய்து, ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

இந்த எல்லைப் பிரச்சினையை அறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரு மாநில முதலமைச்சர்களுடனும் தொலைப்பேசியில் பேசி எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அறிவுறுத்தினார்.

இதையடுத்து எல்லைப் பிரச்சினையை அமைதியான முறையில், சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதாக இரு மாநில முதலமைச்சர்களும் அமித் ஷாவிடம் உறுதியளித்துள்ளனர்.

இந்தச் சூழலில் அசாம் மாநில முதலமைச்சர், காவல் உயர் அலுவலர்கள் மீது மிசோரம் போலீஸார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மிசோரம் காவல்துறை ஐஜி ஜான் நேஹாலியா கூறுகையில், “கொலாசிப் மாவட்டத்தின் வெய்ரன்ட் கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, அசாம் காவல் உயர் அலுவலர்கள் உள்ளிட்ட 4 பேர், போலீஸார் ஆகியோர் மீது வெய்ரன்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசாம் காவல்துறை ஐஜி அனுராக் அகர்வால், கச்சார் டிஐஜி தேவ்ஜோதி முகர்தி, கச்சார் மாவட்டக் கண்காணிப்பாளர் சந்திரகாந்த் நிம்பல்கர், டோலை காவல் நிலையப் பொறுப்பாளர் சனாப் உதின் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கச்சார் காவல் துணை ஆணையர் கீர்த்தி ஜாலி, சச்சார் மாவட்ட வனத்துறை அலுவலர் சன்னிதியோ சவுத்ரி ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு, கிரிமினல் சதி ஆகிய பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அடையாளம் தெரியாத அசாம் போலீஸார் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது''.

இவ்வாறு நேஹாலியா தெரிவித்தார்.

இதற்கு பதிலடியாக அசாம் போலீஸாரும், மிசோரம் அரசு உயர் அலுவலர்கள் 6 பேருக்கு கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சம்மன் அனுப்பியுள்ளனர். மிசோரம் மாநிலம் கொலாசிப் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் உள்ளிட்ட 6 அரசு அலுவலர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மிசோரம் அலுவலர்கள் மீது கொலை முயற்சி வழக்கு (307), கொலை வழக்கு (302), கலவரத்தை ஏற்படுத்துதல் (ஐசிபி பிரிவு 147), கலவரத்தைத் தூண்டுதல் பயங்கர ஆயுதம் ஏந்துதல் (148), சட்டவிரோதமாகக் கூடுதல் (149), கிரிமினல் சதி (120பி), அத்துமீறுதல், மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுதல், திருட்டு (379), அரசு அலுவலர்களைத் தாக்குதல், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலாசிப் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஹெச்.லலித் லாங்லியானா, காவல் கண்காணிப்பாளர் வன்லால்பகா ரல்தே, கூடுதல் எஸ்.பி. டேவிட், வெய்ரன்ட் துணை சார்பாளர் லால்ரெம்புயா, உள்ளிட்ட 6 உயர் அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராக அசாம் அரசு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details