ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் தனித்துவப் பாரம்பரிய விழாவான ‘ஆஷாத் போனாலு’விழா, மிகுந்த உற்சாகத்துடன் இன்று (ஜூன் 22ஆம் தேதி) துவங்குகிறது. இந்த திருவிழாவை ஒட்டி, ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களில் உள்ள கோயில்கள், மலர்கள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களால், அழகுற அலங்கரிக்கப்பட்டு உள்ளன. கோல்கொண்டா கோட்டையில், உள்ள மகாகாளி கோயிலில், முதற்கட்டமாக, இந்த விழா துவங்க உள்ளது.
லங்கர் இல்லத்தில், இன்று பிற்பகல் நடைபெற உள்ள தொட்டிகள் ஊர்வலத்தில் அமைச்சர்கள் இந்திரகரன் ரெட்டி, தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், மஹ்மூத் அலி ஆகியோர் கலந்து கொண்டு, அரசு சார்பில் அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளனர்.
இந்த விழாவிற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களுக்கு தேவையான, அனைத்து விதமான ஏற்பாடுகளும், தெலங்கானா அரசால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆஷாத் போனாலு திருவிழாவை ஒட்டி, ஹைதராபாத் சுற்றுவட்டாரமே, ஆன்மிக நகரமாக உருமாற உள்ளது.
பெண்களின் முக்கியப் பங்களிப்புடன் நடைபெறும் போனாலு திருவிழா, மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அதிக முக்கியத்துவம் வாய்ந்த தனித்துவமான கலாசார பண்டிகை ஆகும். இது பாரம்பரியம் மற்றும் பெண்ணிய சக்தியுடன் ஆழமாக பின்னிப்பிணைந்த ஒரு திருவிழா ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில், "Bonam" என்ற சொல், குடும்ப உறவுகள் மற்றும் மரியாதையில் வேரூன்றிய ஒரு இணைப்பைக் குறிக்கிறது. பெண்கள், மிகுந்த பக்தியுடன், தெய்வீக அன்னையான அம்மனுக்கு, மண் அல்லது செம்பு பாத்திரங்களில் அரிசி, பால் மற்றும் தயிர் அடங்கிய புனிதமான பிரசாதத்தை படைக்கின்றனர்.
போனாலு திருவிழாவை, இந்த ஆண்டு விமரிசையாக நடத்தும் பொருட்டு, தெலங்கானா மாநில அரசு, ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது, அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் விழாக்கள் சிறப்பாக நடத்தப்பட உள்ளதாக, அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் தெரிவித்து உள்ளார்.
கோல்கொண்டாவில், இன்று உற்சாகமாக துவங்கும் ஆஷாத் போனாலு விழா, ஜூலை 9ஆம் தேதி செகந்திராபாத் மகாகாளி கோயிலிலும், 16ஆம் தேதி பழைய நகரிலும், 17ஆம் தேதி கூட்டுக் கோயில்களின் சார்பில் ஊர்வலமும், ஹைதராபாத் நகரம் முழுவதும் நடைபெற உள்ளன. இலட்சக்கணக்கான பக்தர்கள், இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
போனாலு திருவிழாவின் சுவாரசியமான பின்னணி...
போனாலு திருவிழா, கிராம தெய்வங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிராம தெய்வங்களான எல்லம்மா, மைசம்மா, போச்சம்மா, முத்யாலம்மா, பெத்தம்மா உள்ளிட்ட தெய்வங்கள், இந்த விழாவின் போது, மஞ்சள், குங்குமம், புடவைகள் உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்படுகின்றன. இந்த தெய்வங்கள், பலம் பொருந்தியவர்களாகவும், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பவர்களாக உள்ளதாக, மக்கள் கருதி வருகின்றனர். இந்த பாரம்பரியத் திருவிழா, தெலங்கானா மட்டுமல்லாது, ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
போனாலு திருவிழாவின் வரலாற்றுப் பின்னணியை அறிய வேண்டுமென்றால், நாம் சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும். ஆறு நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில், தெலுங்கு தேச மண்ணில், இந்த விழா, முதன்முதலாக கொண்டாடப்பட்டதாக, புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.