மும்பை - கோவாவுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தில் கலந்துகொண்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சன்ட், மாடல் அழகி முன்முன் தமெச்சா ஆகியோரும் அடக்கம்.
ஆர்யன் கானுக்கு பிணை
இதையடுத்து, ஆர்யன் கான் உள்பட மூவரும் போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களுக்குப் பிணை வழங்க மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, மூவரின் தரப்பும் பிணை வழங்கக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. ஏறத்தாழ 22 நாள்களுக்குப் பின்னர், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி மூவருக்கும் பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதி ஆர்யன் கான் விடுதலையானார்.
இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி நிதின் சாம்ப்ரே வழங்கிய 14 பக்க ஜாமீன் உத்தரவின் விவரம், தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஆர்யன் கானுக்கு ஜாமீன் ஏன் வழங்கப்பட்டது என்ற விவரம் இடம் பெற்றுள்ளது.