தெலங்கானா: தெலுங்கானா உசேன் சாகர் ஏரியில் 13ஆம் தேதி “பாய்மரப் படகு வார விழா-2021” நடைபெற்றது.
இந்த விழாவில் தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு படகுப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 75 படகுகள் கலந்து கொண்டன.
இவ்விழாவில பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, "தேசிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாடெங்கிலும் இருந்து மாலுமிகள் கலந்து கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக, அண்மையில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்த உசேன் சாகர் ஏரியில் பயிற்சி பெற்ற நேத்திர குமணன் மற்றும் விஷ்ணு சரவணன் ஆகிய இளம்வீரர்கள் கலந்து கொண்டது பெருமைக்குரியதாகும்.
இந்த பாய்மரப்படகு வாரவிழா மாலுமிகள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியையும், விளையாட்டு ஆர்வத்தையும், வெற்றி பெற வேண்டும் என்ற தன்முனைப்பையும் ஏற்படுத்தும் என்றும், இளம் மாலுமிகளை ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறேன்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020-இல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவருடைய கடின உழைப்பும் விடாமுயற்சியும் அவர் இந்த சாதனையை செய்ய உதவி புரிந்தது.
இந்த ஏரி பல சாம்பியன்களின் பயிற்சிக் களமாக இருந்து வருகிறது. அவர்கள் பல சாதனைகளைப் படைக்கிறார்கள்" என்று பேசினார்.