பாலசோர் (ஒடிசா):கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜூன் 2) பாலசோர் அருகே பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 15 பெட்டிகள் வரை தடம் புரண்ட நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பொதுமக்களின் உதவியுடன் இரவு பகலாக முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதனிடையே, ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று (ஜூன் 3) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதேபோல, இந்த ஒரிசா ரயில் விபத்து காரணமாக ஒரு நாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் பாலசோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஏராளமான பொதுமக்கள் உள்பட தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்வதற்காக குவிந்துள்ளனர்.இது குறித்து சஞ்சீவ் என்பவர் தனது டிவிட்டரில் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவில், 'பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரயில், சரக்கு ரயில், கோரமண்டல் ஆகிய ரயில்கள் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் இதுவரையில், பலி எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளதாகவும் (தற்போதைய நிலையில் 238 பேர் உயிரிழப்பு), சுமார் 900 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும்' தெரிவித்துள்ளார்.
மேலும், 'இவர்கள் பாலசோர் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு ரத்த தானம் செய்வதற்காக கூடிய உள்ளூர் பொதுமக்கள்' என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, அபிஷேக் ஜோஷி என்பவர், 'நள்ளிரவில் பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய வரிசையில் காத்திருப்பதாகவும், இங்கு ரத்த தானம் செய்துள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் வாழ்த்துகள் என்றும், எனது ஒடிசா எந்த நெருக்கடியானாலும் ஒன்றுபடுவோம்' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.