கொல்கத்தா:மேற்கு வங்கத்தின் பூர்பா மேதினிபூர் மாவட்டம் பூபதிநகரில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீட்டில் நேற்று (டிசம்பர் 2) குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் ராஜ்குமார் மன்னா உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து உடல்களை மீட்டனர். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பூபதிநகர் போலீசார் தரப்பில், இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணியளவில் நடந்துள்ளது.
வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், வெடித்தது வீட்டு உபயோக பொருள்களாக இருக்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் வெடிப்பு மிகவும் தீவிரமாக இருந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு தடயவியல் குழு வரவழைக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. முதல்கட்ட விசாரணைக்கு பின் விவரம் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.