பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, இரண்டு அமைச்சர் பதவி வழங்க என்.ஆர். காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்தார்.
இதுவரை துணை முதலமைச்சர் பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் அவர் அப்செட்டில் இருப்பதாக புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் விரைவில் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு நடைபெறும் என பாஜக தரப்பில் கூறப்பட்டுவந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள புதுச்சேரி மேலிடப் பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, பாஜக தலைவர்களுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நமச்சிவாயம் திடீரென நேற்று பெங்களூரு சென்றனர்.
நிர்மல்குமார் சுரானாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சுவாமிநாதன், நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் பேசினர். அப்போது துணை முதலமைச்சர் பதவிக்குப் பொறுத்து இருக்குமாறு சமாதான முயற்சி நடந்ததாகத் தெரிகிறது.