மங்களூரு: கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள நெட்டார் கிராமத்தைச்சேர்ந்த பிரவீன் நெட்டார்(32) என்பவர், பாஜக இளைஞரணி செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
இவர் கடந்த 26ஆம் தேதி இரவு சந்தேகத்திற்குரிய நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அம்மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டதைக்கண்டித்து பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்டப் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுப்பேருந்தில் கண்ணாடிகளை கல்வீசி உடைத்தனர். உயிரிழந்த பாஜக பிரமுகரின் உடலை எடுத்துச்செல்லும்போதும், பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில், பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட பெல்லாரே பகுதியில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அலோக் குமார் நேரில் ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது வரை, சந்தேகத்தின் பேரில் 15 பேரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்துவருகிறோம். இந்தச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வன்முறை தீவிரமடைந்தபோது, போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டி இருந்தது" என்று கூறினார்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் பாஜக நிர்வாகி கொடூர கொலை