கவுகாத்தி :அசாம் மாநிலத்தின் திம்ம ஹாசோ மாவட்டம் அரசியலமைப்பின் 244வது சட்டப் பிரிவின் கீழ் கடந்த 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் தன்னாட்சி அந்தஸ்து பெற்று அது முதலே இயங்கி வருகிறது. 30 உறுப்பினர்களை கொண்ட வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சிலில் 28 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
மீதமுள்ள 2 உறுப்பினர்களக்கான இடங்கள் மாநில அரசால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த 28 உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்றது. அசாம் தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலில் 85 புள்ளி 78 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஜன. 12) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் 28 இடங்களில் பாஜக 25 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள 3 உறுப்பினர்கள் சுயேட்சைகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேர்தலுக்கு முன்னதாக 6 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சிலின் தலைவர் டெபோலால் கர்லோசா (Debolal Garlosa) தெஹாங்கி கவுன்சில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் முன்னாள் கிளர்ச்சிக் குழு தலைவர் நிரஞ்சன் ஹோஜெய், ஹதிகளி தொகுதியில் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தேர்தல் வெற்றியை தொடர்ந்து திம்ம ஹாசோ மாவட்ட மக்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்து உள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், அசாம் பாஜக மீது நம்பிக்கை கொண்டு இருந்த திம்ம ஹாசோ மக்களுக்கு நன்றி உணர்வுடன் என்றும் இருப்பதாகவும், மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பாஜக தொடர்ந்து செயல்படும் என்றும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த தன்னார்வலர்களுக்கு நன்றி என்றும் பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டவர்களும் திம்ம ஹாசோ மக்களுக்கு நன்றி தெரிவித்து தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவுட்டு உள்ளனர்.
இதையும் படிங்க :டெல்லி மதுபான ஊழல் வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4வது முறை சம்மன்!