தமிழ்நாடு

tamil nadu

உண்மையான பிரச்னைகளை மறைக்க பாஜக வகுப்புவாத அரசியலைப்பயன்படுத்துகிறது: சரத் பவார் தாக்கு!

By

Published : Jun 6, 2022, 4:44 PM IST

நாட்டில் நிலவும் உண்மையான பிரச்னைகளை மறைக்க பாஜக வகுப்புவாத அரசியலைப் பயன்படுத்துகிறது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சரத் பவார்
சரத் பவார்

மும்பை: நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகள் மீதான விமர்சனங்கள், கேள்விகளைத் தவிர்க்க பாஜக வகுப்புவாத அரசியலைப் பயன்படுத்துகிறது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சரத் பவார் நேற்று (ஜூன் 5) செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாடு இன்று எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னை விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம். பாஜக இதைப் புறக்கணித்து, வகுப்புவாத கருத்துகளை ஊக்குவிக்கிறது.

ஒன்றன் பின் ஒன்றாக சர்ச்சையை உருவாக்கி, பல்வேறு மதங்களுக்கு இடையேயான சகோதரத்துவத்தை ஆபத்தில் ஆழ்த்துவதுதான் மோடி அரசு மற்றும் பாஜகவின் செயல்திட்டம்" என்று கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வாரணாசி ஞானவாபி மசூதி விவகாரத்தை குறிப்பிட்டு பேசினார். மேலும் அவர் "நாம் மட்டுமல்லாது உலக மக்களே வியந்து போற்றும் பல சிறப்பு வாய்ந்த இடங்கள் நம் நாட்டில் உள்ளன. சிறந்த கட்டடக்கலை கொண்ட தாஜ்மஹால் நம் நாட்டின் அடையாளம். ஆனால், ராஜஸ்தானில் இருந்து வந்த ஒருவர் அதை சொந்தம் கொண்டாடுகிறார். நம் முன்னோர்கள் இதை உருவாக்கினார்கள். டெல்லி குதுப்மினார் யார் கட்டியது என்று உலகே அறியும். இந்த விவகாரங்களில் நீதிமன்றம் முடிவெடுக்கும்.

விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை.

நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் பாஜகவை வீழ்த்த தயாராகி வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இதனை முன்னேடுக்கும். நாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். தோழமைக்கட்சிகளும் இதனை முன்னேடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: தனிநபர் வருமானம் குறைந்து விட்டது... பாஜக திவாலாகிவிட்டது... ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details