மேற்குவங்கம்: 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக பரப்புரைகள் வலுவான அடித்தளமாக அமைந்தன. பாஜக பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியும், மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜகவினர் மேற்குவங்க மாநிலத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினர். ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தீவிரமாக பரப்புரை செய்தனர். அதன் விளைவாக 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு தேர்தல் யுக்திகளையும், விளம்பர யுக்திகளையும் கையாள திட்டமிட்டுள்ளனர். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சமூக ஊடக பரப்புரையில், அதிகளவு கவனம் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. சமூக ஊடகங்களில் பரப்புரை செய்வது குறித்து மேற்குவங்க பாஜகவினருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
மேற்கு வங்கம் முழுவதும் உள்ள பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மட்டுமல்லாது, பூத் கமிட்டியில் இருக்கும் பணியாளர்கள் வரை அனைவருக்கும் சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.