டிசம்பர் 1ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
150 வார்டுகள் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.), பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே களம் கண்டன.
அதில், 56 இடங்களுடன் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) முதலிடத்திலும், 48 இடங்களுடன் பாஜக இரண்டாம் இடத்தையும் பெற்றன. அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏஐஎம்ஐஎம்) 44 இடங்கள் கிடைத்துள்ளது.
பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியின் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார், “ மாநகராட்சி தேர்தலில் 48 இடங்களை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலத்தை ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி வெற்றிப்பெறுவதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது. மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது.
குறுகிய காலத்தில் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டது. எங்களுக்கு வேட்பாளரை முடிவு செய்யக் கூட கால அவகாசம் வழங்கப்படவில்லை. இத்தனை இடர்களையும் கடந்து நாங்கள் இத்தகைய மகத்தான வெற்றியை உறுதிசெய்துள்ளோம்.
பாஜகவின் தேசியத் தலைவர்களின் வருகையால், தெலங்கானாவில் பாஜக பெற்றிருந்த செல்வாக்கு, மக்களின் அமோக ஆதரவு, பாஜக தொண்டர்களின் உழைப்பு, சமூக ஊடகங்கள் மூலமாக மேற்கொண்ட பரப்புரை இவை யாவும் இந்த் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
பாஜகவின் வாக்குப் பங்கு 10 விழுக்காட்டிலிருந்து 35.56 விழுக்காடாக உயர்ந்துள்ளது. டி.ஆர்.எஸ் மீது மக்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு எழுந்துள்ள்ளது என்பதை இந்த வாக்கு வங்கி அப்பட்டமாக காட்டிவிட்டது. அதேபோல பாஜக மீது மக்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்திவிட்டது.
பாஜகவுக்கு எதிரான டி.ஆர்.எஸ், எம்.ஐ.எம் மற்றும் காங்கிரஸ் பரப்புரையை மக்கள் புறக்கணித்துள்ளனர். பாஜகவை எதிர்கொள்ளும் திறன் இந்தக் கட்சிகளுக்கு இல்லை.
பெரும்பாலான இடங்களில் மிகக் குறைவான வாக்கில் தான் பாஜக வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட்டிருந்தால், 100 இடங்களை பாஜக வென்றிருக்கும். தேர்தல் வரை அரசியல் நடந்தது, இப்போது எங்கள் இலக்கு வளர்ச்சியை உறுதி செய்வது தான்.
பொதுப் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில அரசு எங்களோடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கே.சி.ஆர் தனது அரசியல் நடவடிக்கைகளை மாற்றாவிட்டால், பரப்புரை இயக்கங்கள் தொடங்கப்படும்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகர் என மாற்றக் கோரி மக்கள் இயக்கம் நடத்தவுள்ளோம். நடிகையும், அரசியல் தலைவருமான விஜயசாந்தி விரைவில் பாஜகவில் சேரவுள்ளார்” என்றார்.
ஹைதராபாத் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டுமென மீண்டும் குரல் எழுப்பும் தெலுங்கானா பாஜக! தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கமிட்டியின் மோசமான தோல்வி தோல்விக்கு பொறுப்பேற்று தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா செய்திருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க :தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோளை ஏவும் இஸ்ரோ